27.06.2022 முதல் பாடசாலைகள் முற்றாகப் புறக்கணிப்பு - இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் | இன்னும் பல...
27.06.2022 முதல் பாடசாலைகள் முற்றாகப் புறக்கணிப்பு - இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் | இன்னும் பல...

27.06.2022 முதல் பாடசாலைகள் முற்றாகப் புறக்கணிப்பு - இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்

எதிர்வரும் திங்கள் (27) முதல் ஆசிரியர்கள் அதிபர்கள் பாடசாலைக்குச் செல்லமாட்டோம் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் செயலாளர் சரா. புவனேஸ்வரன் தெரிவிக்கையில்;

நாளை மறுதினம் திங்கட்கிழமை 27 ஆம் திகதிபாடசாலைகள் ஆரம்பமாகும்போது எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அது இலங்கையின் அனைத்துப் பாடசாலைகளையும், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் குழப்புகின்ற அரசியலாகவே இருக்கின்றது. அதாவது நகர்ப்புற பாடசாலைகள் மூன்று நாட்களும் கிராமப்புற பாடசாலைகள் ஐந்து நாட்களும் நடைபெற வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது ஒரு வேடிக்கையான விடயம். கிராமப்புறங்களில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஒட்டு மொத்தமாக நகரங்களிலிருந்து செல்கின்றவர்கள். அவர்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து மார்க்கங்கள் எதுவுமே இங்கில்லை. பொதுப் போக்குவரத்து பேருந்துகள் கூட அந்த ஆசிரியர்களை ஏற்றிச்செல்ல மறுக்கின்றன. அவர்கள் தனியாகச் செல்வதற்கு எரிபொருள் இல்லை. இந்த நிலையில் அவர்களை பாடசாலைக்குச் சென்று மாணவர்களுக்கு கற்பியுங்கள் என்று கூறுவது உண்மையில் மோசமான ஒரு அறிவிப்பு.

நாங்கள் பிள்ளைகளுடைய கல்வியில் அக்கறையாக இருக்கின்றோம். எத்தகைய பயங்கரமான சூழ்நிலைகளிலும் அவர்களுக்கு கல்வி ஊட்டியவர்கள் நாங்கள். ஆனால், இன்று ஏற்பட்டிருக்கின்ற இந்த சூழலில் ஒட்டுமொத்த மக்களையும் இன்று வீதிகளில், வரிசைகளில் வைத்திருக்கின்றது இந்த அரசாங்கம்.

இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடிய மனநிலையில் ஆசிரியர்களோ அல்லது கற்கக்கூடிய மனநிலையில் மாணவர்களோ இல்லை என்பதனை அரசாங்கம் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

விசேடமாக அன்றாட வாழ்க்கைக்கு அன்றாட உணவுக்கே வழி இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்ற போது, அந்த அவஸ்தைக்கு மாற்றீடாக மாணவர்களுக்கு மதிய போசனத்தை கொடுங்கள். ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு பொதுப் போக்குவரத்தை இலவசமாக்குங்கள் என்று பல்வேறு விதமான கோரிக்கைகளை முன்வைத்த போதுஅரசாங்கம் எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை.

மாறாக தாங்கள் எடுத்த கொள்கையிலிருந்து மாறாது, பாடசாலைகளில் 3 நாட்கள், 5 நாட்கள் நடத்துங்கள் என்று சொல்வது வேதனை அளிக்கின்றது.
எரிபொருளுக்காக தீர்வு கிடைக்கும் வரை திங்கள் முதல் நாங்கள் யாருமே பாடசாலைக்குச் செல்லமாட்டோம். இது உறுதியான அறிவிப்பு.

இதனை மத்திய கல்வி அமைச்சருக்கும், கல்வி அமைச்சின் செயலாளருக்கும், மாகாணங்களின் கல்வி அமைச்சுச் செயலாளர்களுக்கும், மாகாணங்களின் பணிப்பாளர்களுக்கும், வலயங்களின் பணிப்பாளர்களுக்கு நாங்கள் தெளிவாக அறிவித்திருக்கின்றோம்.

ஆகவே, இந்த அறிவித்தலை மாகாண செயலாளர்கள், மாகாண பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் கூட புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.

எனவே, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பெற்றோர்கள் தமது மாணவர்களை வீடுகளில் வைத்திருந்து இந்த அரசாங்கத்திற்கு சமாதி நிலையை எடுத்துக் காட்ட வேண்டிய நிலை காணப்படுகின்றது என்றார்.


திக்கம் வடிசாலை தென்னிலங்கை நிறுவனத்துக்குத் தாரை வார்ப்பு

வடமராட்சி திக்கம் வடிசாலை தென்னிலங்கை நிறுவனத்துக்குத் தாரை வார்ப்பு பனை அபிவிருத்திச்சபைத் தலைவரின் பேரினவாத எதேச்சாதிகாரம். பொ. ஐங்கரநேசன் கடுங்கண்டனம். எதிர்த்துப் போராட அணிதிரளுமாறும் அழைப்பு

திக்கம் வடிசாலையின் உரிமத்தைத் தங்களிடம் மீளவும் கையளிக்குமாறு அதை நிர்வகித்துவரும் வடமராட்சி பனைசார் உற்பத்தித் தொழிலாளர்கள் நீண்டகாலமாகக்கோரி வருகின்றனர். பல போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர். ஆனால், இப்போது இவர்களைப் புறந்தள்ளி, இவர்களுக்கே தெரியாமல் பனைஅபிவிருத்திச் சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜ திக்கம் வடிசாலையைத் தென்னிலங்கையைச் சேர்ந்த வி.ஏ டிஸ்ரிலறிஸ் என்ற நிறுவனத்துக்கு 25 வருடக் குத்தகைக்குத் தாரை வார்த்துள்ளார்.

பேரினவாத எதேச்சாதிகாரப் போக்குடன் வடமராட்சி பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையைத் தட்டிப்பறித்து தனது இனத்தவர்களிடம் கையளித்துள்ளார் என்று தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

திக்கம் வடிசாலை தொடர்பாக சனிக்கிழமை (25.06.2022) பொ. ஐங்கரநேசன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;

பனை தமிழ் மக்களின் இயற்கை வளங்களில் முதன்மையானது. இதிலிருந்து பொருளாதார ரீதியாக அதியுச்சப் பயனை அறுவடை செய்யவேண்டும் என்ற நோக்குடனேயே பனை அபிவிருத்திச்சபை ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால், இதன் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் பனை பற்றிய பட்டறிவையோ, படிப்பறிவையோ கொண்டிராமல் அரசியற் சிபார்சை மட்டுமே தகுதியாகக் கொண்டிருந்தார்கள். ஆளுங்கட்சியில் அல்லது அதற்கு முண்டு கொடுக்கும் தமிழ்க்கட்சிகளில் இருந்து தேர்தலில் தோற்றுப் போனவர்களுக்குப் பிரதியுபகாரமாகத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இவர்களால் பனைத் தொழில் சீரழிந்து இறங்கு முகமே கண்டது. இப்போதைய தலைவர் கிரிசாந்த பத்திராஜவும் அதையே கனக்கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்.

திக்கம் வடிசாலை 1983 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலும், பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் நிதியிலும் உருவாக்கப்பட்டது. சுயாதீனமாக இலாபத்தோடு இயங்கி வந்த இந்த வடிசாலை, 1987இல் வடமராட்சியில் இடம்பெற்ற ஒப்பறேசன் லிபறேசன் இராணுவத் தாக்குதல் காரணமாகப் பலத்த சேதமடைந்தது. இதனால், பனை அபிவிருத்திச்சபையிடம் இருந்து உதவி பெற நேரிட்டது. ஆனால், ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த கதையாகப் பனைத் தொழிலாளர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி 2001ஆம் ஆண்டு அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் திக்கம் வடிசாலை பனை அபிவிருத்திச் சபையின்கீழ்க் கொண்டுவரப்பட்டது. அப்போதிருந்தே திக்கம் வடிசாலையின் சுயாதீனம் பறிபோனது.

பனை அபிவிருத்திச் சபையின் தலைவர்கள் அரசியல் நியமனம் என்பதால் அவர்களின் கீழ் இருந்து வந்த திக்கம் வடிசாலையின் வளங்களும் அரசியற் தேவைகளுக்கே பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டது. இதனாலேயே, திக்கம் வடிசாலையை பனை அபிவிருத்திச் சபையிடமிருந்து விடுவிக்க வடமராட்சி பனைசார் உற்பத்தித் தொழிலாளர்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.

பனை தமிழர்களின் தேசியவளம் என்பதால், இது ஒட்டு மொத்தத் தமிழர்களின் பிரச்சினையும் ஆகும். திக்கம் வடிசாலையைத் தென்னிலங்கை முதலாளிகளிடமிருந்து மீட்கவும், பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜவின் பேரினவாத எதேச்சாதிகாரத்தைக் கண்டித்தும், பனைசார் உற்பத்தித் தொழிலாளர்களின் பின்னால் தமிழர்களாக நாம் அனைவரும் அணிதிரண்டு போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.


27.06.2022 முதல் பாடசாலைகள் முற்றாகப் புறக்கணிப்பு - இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் | இன்னும் பல...

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More